Navigation Menu

பத்து ரூபாய் ஞானி!

(டெரர்கும்மி 2011 விருது வழங்கும் நிகழ்வில் கதைப்பிரிவில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை!)

அதிகாலை சூரியன் நெற்றியைசுட்டுக்கொண்டிருந்தது.


உழவு,விவசாயம்,விவசாயி



“அப்பா! நான் கெளம்பிட்டேன். காசு குடு.” இந்த வார்த்தைகள் எப்போது வருமோ என்று பயந்துகொண்டிருந்த அப்பா...,

“அம்மாகிட்ட கேட்டியாடா?”


“அம்மாகிட்டல்லாம் இல்லையாம்பா, உனக்கிட்டதான் கேக்கசொல்லுது. பஸ்சு வரப்போகுது. நான் வயக்காட்ட கடந்து போறதுக்குள்ள லேட்டாயிடும்பா.” “பஸ்ஸ விடப்போறேன் போ!” அழுக முடியா வேதனையில் கடுப்பாகிவிட்டான் நம்மாளு.

நான்கு நாட்களுக்கு முன்பு பெய்த மழையால், மனக்கட்டிலிருந்து அரித்துக்கொண்டு போன மண்ணை வெட்டி மனக்கட்டில் போட்டுக்கொண்டே...... ஹாஸ்டல்ல இருந்து சனி ஞாயிறு லீவுக்கு வந்தவனுக்கு, கையில காசில்லம, வாய்க்கு ருசியா சமச்சிப்போட முடியல. எத்துன நாளைக்குத்தான் வய நண்டையும், கீரதண்டயுமே சாப்டறது. அவ வேற, வயல்ல இறங்கி வேல பாத்ததுல காலுல சேத்துப்புன்னோட கெடக்கிறா. ஏக்கனவே, போனவருஷம் வளத்தாருட்டு கடையில கடனுக்கு வாங்குன உரத்துக்கும் களைக்கொல்லிக்கும் இன்னமும் காசு கொடுக்கல. கையில காசில்லாம கடைப்பக்கம் வராதேன்னு அவரும் சொல்லிட்டாரு. கடன்காரன் வந்து நெருக்குனான்னா, கோவணம் கூட மிஞ்சாது. ஒரு மூட யூரியாவும், டீஏபீ யும் கலந்து போட்டாத்தான் பயிறு கருப்பு கொடுக்கும் நல்லா வரும். இல்லனா, ஊருக்கார பயலுக காரி துப்பும்படியா ஆயிரும். கை உருளைக்கு நின்ன சின்னையா ஆயிரம் ரூவா கொடுத்தாரு. (பாவம் தோத்து போய்ட்டாரு) அதுல தீவாளி செலவு போக, அறநூத்தி அறுபதுதான் தான் மிஞ்சியிருக்கு. இதுல ஒரு மூட யூரியாவும், டீஏபீ யும் எடுக்கனுமுன்னா, இன்னும் ஐநூத்தி எம்பது வேணும். இதுல இவன்வேற நாப்பது ரூவா............

“ஏ!.. சனியனே, புள்ள பஸ்சுக்கு நேரமாச்சுன்னு அழுதுகிட்டு நிக்கிறான். நீ பாட்டுக்க எரும மாடு மாதிரி பேசாம இருக்கே.”

அம்மாவின் அன்பான வார்த்தைகளில் மேற்க்கண்ட சிந்தனையிலிருந்து  வெடுக்கென பிடுங்கப்பட்டார் அப்பா.

“எவ்வளவுடா வேனும்.?”

“எத்தன தடவதாம்ப நீ இதையே கேப்ப? நாப்பது ரூவா கொடு.”

“அவ்வளவு ரூவா எதுக்குடா?”

“எங்க பள்ளிகொடத்துல, வெள்ளிக்கிழம அன்னிக்கு, இந்தியா மேப்பும், பொது அறிவு புத்தகமும் ஒருத்தரு கொண்டாந்து வித்தாரு. வெளில அறுபது ரூவா விக்கிறது, மாணவர்களுக்காக இருவது ரூவாதானாம். திங்க கிழமை இன்னிக்குதான், அவரு மறுபடியும் வர்றதா சொல்லிருக்காரு. மீதி இருவது ரூவா போக்குவரத்து செலவுக்கு.”

“பஸ் பாஸ் எடுத்திருந்தா இருவது மிஞ்சுமில்லடா?”

“அதுக்கு என்னய நீ ஆவுடையார்கோவில்ல சேத்திருக்கனும், 22ல பஸ்பாஸ்ல போயிட்டு வரலாம். நீ ஏன் என்ன காரைக்குடியில சேத்தே? காரைக்குடியில இருந்து நம்ம ஊருக்கு எம் பீ டீஸ் மட்டும்தானே இருக்கு. எம் பீ டீஸ் ல பஸ் பாஸ்லாம் செல்லாது.”

ஆவுடையார்கோவில விட காரைக்குடில நல்லா சொல்லிகொடுப்பாங்கன்னு சேத்துவிட்டா, இவன் பஸ்ஸ பத்தி பேசுறான். போற போக்க பாத்த, என்ன ஏன்டா பெத்தேன்னு கேட்டாலும் கேட்பான். செலவுக்கெல்லாம் பயப்படாமத்தானே, இவன அங்கே கொண்டே சேத்தோம். வேற வழியில்ல, உரத்துக்கு வேற ஏதாவது முடிஞ்சா பண்ணலாம். ஊருக்கார பயலுக என்ன வேணுன்னாலும் சொல்லிட்டு போராணுக.

யோசித்துக்கொண்டே அப்பா, நான்கு பத்து ருபாய் தாள்களையும், வாருக்குள் கிடந்த இரண்டு ஒரு ரூபாய்களை எடுத்து...

“இந்தா, நாப்பத்தி ரெண்டு ரூவா இருக்கு, ரெண்டு ரூவாய செலவுக்கு வச்சுக்க. நால்லா படிடா ராசா, அப்பாவும் அம்மாவும் எவ்வளவு கஷ்டப்படுறோம் பாத்தியா! நல்லா படி, உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.”

நம்ம இவ்வளவு கஷ்டப்படுறது வீணாகி போய்விட கூடாதென்று நினைத்தாரோ என்னவோ. நாற்பத்து இரண்டு ரூவாய்க்கு சோகமாக வசனங்களை அடுக்கிக்கொண்டே போனார் அப்பா. அதற்குள் மகன் பாதி வயல்காட்டை கடந்து பேருந்தை பிடிக்க ஓடிக்கொண்டிருந்தான்.

“வரப்புல வலுக்கிக்கிறாம மெதுவா போடா............. பஸ்சு வர இன்னும் டயம் இருக்கு.........”

பெற்றவள் இவன் ஓடும் ஓட்டத்தை பார்த்து பதைத்துபோய் சத்தம் போட்டுக்கொண்டிருந்தாள்.

“புள்ளைய பொறைய நின்னு கூப்புடாதடி..”

வழியனுப்பிவிட்ட அப்பாவின் சிந்தனை, மீண்டும் உரத்தை நோக்கி திரும்பியது.ஒரு மூட யூரியாவும், டீஏபீ யும் ஆயிரத்தி எரநூத்தி நாப்பது. இப்போ நமக்கிட்ட இருக்கிறது, அறநூத்தி இருவது, அப்போ இன்னும் அறநூத்தி இருவது வேணும். மழை பேஞ்சு நாலு நாளாச்சு. இன்னி மழை வர, இருவது, இருவத்தஞ்சு நாலாயிரும். எங்க அப்பனுக்கு என் தாத்தன் கொல்லாக்காடா கொடுத்து ஏமத்திபுட்டான். சொனங்குனமுன்னா வயல்ல தண்ணி வத்தி போயிரும்.

“அய்யா!....” இப்பொழுது அப்பா மணியாரரின் வீட்டிற்கு முன்பு.

சிறிது நேரம் கழித்து...

“வா” இது மணியாரரின் மகன்.

“தம்பி நல்லருக்கியலா, அப்பா எங்கப்பா”

“வெளில போயிருக்காரு என்ன விஷயம்?”

“இல்ல...... எல்லா வயலுக்கும் உரம் போட்டாசின்ன..... போடவேண்டியது ஏதும் பாக்கி இருக்காப்பா.”

“ஒன்றகண்ணு வந்து எல்லாத்துக்கும் போட்டுட்டு போயிருச்சு. பாக்கி எந்த வயலும் இல்ல.”
 
 
“இல்ல தம்பி......... கிட்டுன வாய்க்கால்லாம் போட்டாசில்ல.”

“யோவ்! வர்ற எல்லாருக்கும் வேல போட்டுகொடுத்து சம்பளம் கொடுக்க நாங்க என்ன எம்ப்ளாய்மென்ட்டா வச்சு நடத்துறோம்?”

“.... ..... .......”

“வேணுமுன்னா ஒன்னு பண்ணு, இஞ்சினியர் உரம்போட ஆளு கிடைக்கலைன்னு சொன்னாரு. அவரபோயி பாரு.”

அய்யையோ!..... அந்தாளா..! அவன் கூலியே தரமாட்டானே, அப்படியே தந்தாலும், சாயங்காலம் ஒயின்ஷாப்புக்கு கூட்டிட்டு போயி, கொடுத்த கூலி எல்லாத்தையும் கறந்துருவானே! அதனாலதான் அவன் ஆளு கெடைக்கலன்னு சொல்லும்படியா ஆயிருக்கு. இன்னைக்கு நான்தான் மாட்டிருக்கேனோ?.. வேற வழி இல்ல, அதுக்குள்ளே வேற எவனும் புகுந்துடான்னா சிக்கல். என்றவாறு நினைத்துக்கொண்டே..

“சரிப்பா சரிப்பா அப்போ நான் வர்ரம்பா”

“ம்”

இஞ்சினியரின் வயலில் உரம்போட்டுக்கொண்டிருந்த அப்பாவிடம்....., “உரம் போடறது உடம்புக்கெல்லாம் வலி கொடுக்குமுல்ல? ரவைக்கு தூங்க முடியாதே! முடிச்சுட்டு ஆவுடையார்கோவிலுக்கு போயிட்டு வந்துருவோமா?”

உரம்,விவசாயி,விவசாயம்,வயல்,பயிர்

இஞ்சினியரின் சூட்சுமத்தை உணர்ந்துகொண்ட அப்பா..... “அய்யா...! நால்லா இருப்பிய சாமி, யாம்புட்டு வயல்ல உரம்போடாம கெடக்கு, தண்ணி வத்திப்போச்சுன்னா யாம்புட்டு வய தரிசுதாஞ்சாமி. யாம் பயிரெல்லாம் கருகுதுய்யா. இந்த ஒருதடவ ஒரு அறநூறு ரூவா கொடுத்து உதவி செஞ்சிங்கன்னா....”

“யோவ் உனக்கு கூலியே நூறு ரூவா தானய்யா, ஆ.. ஊ...ன்னா உங்க ஆளுகலுக்கு காலுல விழுகுறதே வேலையாப்போச்சு, எந்திரிய்யா, போயி உரத்த போடுய்யா முதல்ல”

“அய்யா..! மாட்டேன்னு மட்டும் சொல்லிறாதீங்க! அடுத்து மருந்தடிக்கிற சீசன் வரும்போது, நான் நம்ம வயலுக்கெல்லாம் மருந்தடிச்சி தர்றேன். நீங்க கூலிய அதுல கணக்கு பண்ணிக்கிரலாம். மாட்டேன்னு மட்டும் சொல்லிராதிங்கய்யா!”

எவ்வளவு முயன்றும் இஞ்சினியரிடமிருந்து அப்பாவால் நூறு ரூபாய்க்கு மேல் வாங்க முடியவில்லை. காலை உணவை, மதியம் இரண்டு மணிக்கு சாப்பிட்டுக்கொண்டே அப்பா, அம்மாவிடம்....

“உரம் எடுக்க இன்னும் ஐநூறு ரூவா வேணும், கையில எழுநூறுதான் இருக்கு, என்ன பன்றதுன்னு தெரியல. ம்ம்ம்...”

“நெல்லு போட்ட காசில்லாம் என்ன பன்னுனிய?”

“மொதபட்டம் உரம்போட்டதுல போச்சு.”

“அட..! அப்ப.. எல்லா காசையும் செலவு பன்னிட்டியலா? வய வேற காயப்போகுது, மத்தவுகட்டு வயலெல்லாம் பாத்தியலா, என்னமோ போங்க,”

“.....  .... .....”

“யாம்புட்டு மூக்குத்தியயாவது வச்சுபுட்டு எடுத்துகிட்டு வர்ரியலா?”

“ஆமா! இருக்குறதே அது ஒண்ணுதான், அப்புறம் ஏதாவது ஆஸ்பத்திரி செலவு அது இதுன்னா அவசரத்துக்கு என்ன பண்ணுவ?”

“தருத்தினியம் புடிச்ச தனமா எதயாவது சொல்லாதீய, இருங்க வர்றேன்”

அம்மா கோபபட்டு பேசினாலும், அவசரத்திற்கு உதவுமென்று எப்பவோ பாதுகாத்து வைத்திருந்த முன்நூறு ரூபாயை அப்பாவிடம் தந்தாள். அதேபோல் அப்பாவும் சேமித்து வைத்திருந்த இருநூறு ரூபாயை, வேறு வழியின்றி எடுத்துகொண்டார்.

“இன்னும் இருவது ரூவா வேணுமே!”

“ஒசமாத்தானே கையில பத்து இருவதுகொட இல்லாமத்தான் இருக்குரியலா?”

“வீட்டுக்குள்ள தேடிப்பாரு, எங்குட்டாவது இருக்கும்.”

இறுதியில்.. அம்மா, எங்கும் காணவில்லை என்று சொல்ல, அப்பாவோ.., சாமிக்கு அப்போதைக்கப்போது நேர்த்திகடனுக்கு சேர்த்துவைத்திருந்த பதினோரு ரூபாயை கையிலெடுத்தார்.

“யோவ்! அது சாமி காசுயா! காருடயா காளிக்கு நேந்துக்கிட்டது,!”

“இந்தமாதிரி சமயத்துல நம்ம சாமிதான் நமக்கு உதவனும், பதினோரு ரூவாய்க்கு, இருவத்தி ரெண்டுரூவாயா சாமிக்கு திருப்பி கொடுத்தா, சாமி கோவிசுக்கிறாது.” என்றவாறு.. பதினோரு ரூபாயில், ஒரு ரூபாயை சாமிக்கு அச்சாரமாக கொடுத்துவிட்டு.., “ஓம்புட்டு காச எடுத்துக்குட்டதுக்கு மன்னிசுக்காத்தா” என்று சொல்லி திருநீறை எடுத்து பூசிக்கொண்டு புறபாட்டார் வளத்தாருட்டு கடையை நோக்கி.

“வீட்டுல நயா பைசா இல்லையா, வாருக்குள்ள கெடந்ததகொட காலையில புள்ளைகிட்ட கொடுத்துட்டே, வீட்ட தொடைச்சி எடுத்துக்கிட்டுபோறே! உசாரா போயிட்டு வா” என்ற அம்மாவின் சத்தம் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்க.. அப்பா மறுபடியும் யோசிக்க ஆரம்பித்தார்.

ஆயிரத்தி எரநூத்தி முப்பதுதானே இருக்கு. இன்னும் பத்து ரூவா வேணுமே! பரவாயில்ல சொல்லிக்கிருவோம். வளத்தாறு என்ன அவ்வளவு மோசமான ஆளா?

வளத்தாருட்டு கடையை நெருங்கிவிட்டார் அப்பா! ஒரு முக்கத்தை தாண்டினால், வளத்தாருட்டு கடை. அதற்குள்.. டொம்மு.. டொம்மு.. என்ற சத்தம் காதில் விழவே, நடையின் வேகத்தை கூட்டி முக்கத்தை தாண்டியவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி!

“பரதேசி நாயே! ஏழாயிரத்தி ஐநூறுக்கு உரம் எடுக்கும் நாயிக்கு இன்னும் நாலுரூவா கொடுக்க தெரியாதோ? வீட்டுக்கு போயி புள்ளகிட்ட கொடுத்து விடுரானாம். நீ அடுத்த வருஷம் கொடுத்து விடுவே, நான் காத்துக்கிட்டு இருக்கானும்.” என்றவாறு வளத்தாரு, ஒருவனை சாக்கால் விலாசிக்கொண்டிருந்தார்.

“அடி போடி! ஏழாயிரத்தி ஐநூறுக்கு உரம் எடுத்து, வெறும் நாலு ரூவாய இந்தா புள்ளகிட்ட கொடுத்துவிடுறேன்னு சொன்னவனுக்கே அந்த கதின்னா!...... நம்மகதிய நெனைச்சு பாரு.”

“யாருகிட்டயாவது நூறு எரநூறு பெறட்ட முடியுமான்னு பாருங்க”

“ஆமாடி! ஏக்கனவே இருக்குற கடங்கரன்லாம் வந்து நின்னான்னா, களைகொல்லிய ஊத்திக்கிரத தவர வேறவழி இல்ல. கடங்கொடுத்தவன்லாம், என்ன பாத்தா கழுத்த புடிக்கிறான், மத்தவங்கெல்லாம், “இவன் கடன் கிடன் கேட்டாலும் கேட்டுப்புருவான்னு” மூஞ்சிய திருப்பிகிறான். இந்த லெட்சனத்துல யாருக்கிட்ட போயி கேக்க சொல்ற?”

“”...... ..... ..”

“பத்துரூவா செலவு பன்னி, ஆறுரூவா மிச்சம்பாத்து கடனாளியாகுரதுக்கு, வேற பொழப்ப பாக்கலாம். சாகும்போது எங்கப்பா சொன்னாரு, “உலகத்துக்கே சோறு போடுறது நம்மதான், எப்பேர்ப்பட்ட நிலைமை வந்தாலும், உன் ஆயிசு இருக்குற வரைக்கும் வெள்ளாமய மட்டும் விட்டுராதாட.”ன்னு

விவசாயி,விவசாயம்,விதை,விதைத்தல்,நெல் விதைத்தல்


“அவரு சொன்னதும் உண்மதான், வயல உழுகும்போது, அந்த மண்ணு பெரண்டு விழுகிற அழக பாக்கும்போதும், வெதச்ச வெத மொளச்சி, மன்னுக்குள்ளேருந்து, அப்டி லே...சா எட்டி பாக்கும்போதும், அந்த பயிரெல்லாம் நம்மலையே பாத்து சிரிக்குற மாதிரி இருக்குமுடி.”

“ஒரு நாளைக்கி வயலுக்கு போகலையினாலும், மறுநாள் போகும்போது, “எங்கள ஏன் நேத்து வந்து பாக்கல?” அப்புடின்னு அந்த பயிரெல்லாம் என்னபாத்து கேக்கும்!”

“பயிரெல்லாம் வளந்து பாலு வெச்ச உடனே, அப்படியே வயசுக்கு வந்த பொம்பளப்புள்ள மாதிரி, ஒவ்வொரு பயிரும் தலைய குனிஞ்சு நிக்கிற அழக பாக்கனுமே! அடடடடா......! வேற தெழில் பன்ற, எவனுக்குடி கெடைக்கும் இந்த பாக்கியம்?.”

நெல்,நெல்மணிகள்,வயல்,பயிர்,விவசாயம்

“எங்களால இனிமேலும் சுமக்க முடியாது, இந்த நெல்லு எல்லாத்தையும் அறுத்து எடுத்துகிட்டு போங்கன்னு அதுக சொன்னதுக்கு அப்புறம், அந்த நெல்லுமணி எல்லாத்தையும் ஒன்னா குமிச்சு வச்சு, அதுகள வாரி அனைக்கும்போது கெடைக்கிற சந்தோசம்........................போச்சு.. எல்லாம் போச்சு.... யாம்பயிரெல்லாம் வயல்ல கெடந்து கருகுது” என்றவாறு தூணில் சாய்ந்து கொண்டே கண்ணீர்விட ஆரம்பித்தார் அப்பா.

அப்பா அழுவதைப்பார்த்ததும், அம்மா தன் அழுகையை நிறுத்திவிட்டு... “சரி சரி வாங்க சாப்புடலாம். ஆண்டவன் ஒருத்தன் இருக்குறான். அவன் பாத்துக்குருவான், எந்திரிச்சி வாங்க.”

அப்பா வாசலையே வெறித்துபார்த்தபடியே அமர்ந்திருந்தார். நிலவு அப்போதுதான் எட்டிப்பார்த்தது. அந்த நிலவு வெளிச்சத்தில், தூரத்தில் இருந்த வேலிக்கருவைகள் கண்ணில்பட... எதையோ கண்டுகொண்டவராக, புதிய உற்சாகத்துடன் எழுந்து அங்கும் இங்கும் ஓடினார்.

“அடியே! நம்பட்டி எங்கடி?” என்றவாறு வாசலில் சுவற்றோரத்தில் வைத்திருந்த மண்வெட்டியை எடுத்துக்கொண்டு ஓடி.. ஒவ்வொரு வேலிக்கருவையையும் சுற்றி சுற்றி தரையை கொத்தி போட்டுக்கொண்டிருந்தார். அவரின் வேகம்.., “யாம் பயிரெல்லாம் பொழைச்சிரும், யாந்தங்கங்கலோட நாளையிலேருந்து வெளையாடப்போறேன்” என்ற மகிழ்ச்சியின் ஆராவாரத்தை காண்பித்தது.

“என்னங்க பன்றிங்க? இங்க போயி கொத்திக்கிட்டு கேடக்குறீங்க. மூள கீள கொழம்பிப்போச்சா என்னான்னு தெரியலையே!”

“அடிபோடி!., மூணாமருஷம் நம்ம வீட்டுக்குள்ள “நல்லது” வந்துசுல்ல, நம்ம பாம்பாட்டியும் நானுமா அடிச்சு கொண்டாந்து இங்கதான் எகுனயோ செம்முனோம். அந்த இடத்ததான் தேடுறேன். நீ போயி லந்துர பத்தவசுக்கிட்டு வா. நிலவு வெளிச்சம் பத்தல.”

“அந்த இடத்த தேடி என்னய்யா பன்னப்போறே?”

“உனக்கு எல்லாத்தையும் சொன்னாதான்டி தெரியும். “நல்லத” செம்மும்போது பசும்பாலு, காசெல்லாம் போட்டு செம்முவோம்ல, அதே மாதிரி, நானும் பாம்பாட்டியும், ஆளுக்கு அஞ்சேகால்ரூவா போட்டு செம்முனோம். அதத்தான் தேடுறேன். நாளைக்கு உரம் எடுக்க போகனுமுடி, நீ போயி லந்துர பத்தவசுக்கிட்டு வாடி கிருக்கச்சி!”

லாந்தரின் வெளிச்சத்தில் எங்கும் கொத்தி பார்த்தாகிவிட்டது. சந்தேகமான சில இடங்களில் வேலிக்கருவையே பிடுங்கப்பட்டது. அந்த இடமே உழுத வயல்போல் காட்சியளித்தது. இறுதியில் அப்பாவின் முகத்தில் பழையபடி சோகம் அமர்ந்துகொண்டது.

“சரி லந்துர எடுத்துக்கிட்டு வா! இதுதான் விதின்னா, யாரால மாத்த முடியும்!”

அம்மா லாந்தரை எடுத்துக்கொண்டு பின்னால் வர அப்பா சென்றார் வீடு நோக்கி!

திடீரென்று அப்பாவுக்கு மறுபடியும் எதோ தோன்ற, கொத்திய இடத்திற்கு அவசரமாக ஓடிவத்து பார்த்தார். அங்கு, லாந்தர் வைக்கப்பட்ட இடத்தை தவிர, மற்ற எல்லா இடமும் கொத்தப்பட்டிருந்தது.

மறுபடியும் உற்சாகம். அந்த உற்சாகத்தின் விளைவு.., கருப்பு நிறத்தில் எதோ ஓன்று, மண்வெட்டியால் கொத்திக்கொண்டிருந்த அப்பாவின் கண்ணை தாக்கியது.

“அம்ம்...மா...” "அது என்னன்னு பாருடி”

இப்பொழுது அம்மாவும் உற்சாகத்துடன் “யோவ்! கார்ரூவாய்யா!”

“என்னடி சொல்றே!” என்றவாறு, இன்பம் அங்கே வந்து சேர்ந்தது. மற்ற எல்லா நாணயங்களும் தேடி கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டு கால் ரூபாய்கள் பாம்புக்கே விடப்பட்டன. மண்ணுக்குள் இருந்தாதால் லேசாக துருப்பிடித்து, கருமை நிறத்தில் இருந்த மற்ற நாணயங்கள், நன்றாக கல்லில் போட்டு தேய்த்து சுத்தம் செய்யப்பட்டன.

அப்பா அந்த இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களை கையில் வைத்து பார்த்துக்கொண்டு தூணில் சாய்ந்திருந்தவாறே, எதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அவர் ஏற்க்கனவே வைத்திருந்த ஆயிரத்து இருநூற்று முப்பது ரூபாயை விட, இந்த பத்து ரூபாய் அதிக மதிப்பு உள்ளனவாக அப்பாவுக்கு தெரிந்தது.

“சாப்புட வாங்க!”

“இருடி!” என்றவாறு அப்பாவின் சிந்தனை தொடர்ந்து கொண்டிருந்தது. அதை கலைக்கும் விதத்தில்..

“ஏங்க! யாருங்க அது? வனிதா மாதிரி தெரியுது. இந்த நேரத்தில எதுக்கு இப்புடி ஓடியாருது?” “என்ன வனிதா.......?”

ஒரு வயல் கடப்பிலிருக்கும் வனிதாவின் வீட்டிலிருந்து வனிதா,... “இந்த தாண்ணே கொண்டுகிட்டு போய்க்கிட்டுருக்கேன்.” என்றவாறு கை பேசியை காதில் வைத்துள்ளவாறு, ஓடிவந்துகொண்டிருந்தாள்.

“அண்ணே ஹாஸ்டல்ல இருந்து பேசுது......”

“அய்யய்யோ, புள்ள இதுவரைக்கும் இப்புடியெல்லாம் போனு பன்ன மாட்டானே!, என்னன்னு கேட்டியா வனிதா............?”

“கேட்டதுக்கு, “அப்பாகிட்ட கொடுபோயி குடு” “அப்பாகிட்ட கொடுபோயி குடு”ன்னு மட்டுந்தான் சொல்லுது.” என்றாள் வனிதா ஓடிவந்துகொண்டே.

“இவதான் புள்ள பொறப்புட்டு போகும்போதே பொறைய நின்னு கூப்புட்டாளே! நான் வேற ஆஸ்பத்தி செலவு அது இதுன்னு வேற பேசிபுட்டேன். என்னன்னு தெரியலையே. கொண்டா..”

“இந்தாங்க பேசுங்க!”

“தம்பி...!”

“இப்புடி திருப்பி வச்சு பேசுங்க!”

“தம்பி...!”

மறுமுனையில்.. “போப்பா இன்னொரு ஒருரூவா உள்ள விளுந்துருச்சி”

“சரி போயிட்டு போகுது, என்னப்பா, என்ன இந்தநேரத்துல போன் பன்னிருக்கியே என்னடா?”

“நீ குடுத்த நாப்பத்தி ரெண்டுரூவாயில, புக்குக்கும் டிக்கெட்டுக்கும் முப்பது ரூவா போச்சு. ரெண்டு ரூவாயிலதான் இப்ப நான் காயின்பாக்ஸ்லேருந்து பேசிட்டு இருக்கேன். இந்த வாரம் நான் ஊருக்கு வரணுமுன்னா.. யாருக்கிட்டாயாவது எட்டு ரூவா கொடுத்து விடு.

தலையில் இடி விழுந்தது போலிருந்தது அப்பாவுக்கு. “அடேய்! அதான் மீதி பத்து ரூவா இருக்குதுல்லடா?”

“அட போப்பா! நீ வேற, பஸ்ல டிக்கெட் வெலல்லாம் ஏத்தியாச்சு தெரியாதா? இன்னைக்கு வரைக்குந்தான் நம்ம ஊருக்கு டிக்கெட்டு பத்து ரூவா, நாளையிலேருந்து பதினெட்டு ரூவா.”

நேரம் இரவு ஒரு மணியை தாண்டியிருந்தது.

அப்பாவையும் நிலவையும் தவிர, ஊரே நித்திரையில் ஆழ்ந்திருந்தது. அம்மாவும் கூட, அப்பாவுக்கு ஆறுதல் சொல்லிய களைப்பில் உறங்கிவிட்டார்.

இதுவரை நடந்த சம்பவங்கலனத்தையும் அசைபோட்டுக்கொண்டே, அப்பா அந்த இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களை தடவிப்பார்த்துகொண்டிருந்தார். அநேககமாக நிலவு கூட, இன்னும் சிறிது நேரத்தில் உறங்கப்போய்விடலாம். அப்பா, ஒவ்வொன்றாக நினைதுப்பார்த்தார். அவரது நெஞ்சை பிடித்து உலுக்கிய, அத்துனை சம்பவங்களும் முகங்களும் வந்து சென்றன. இயலாமையில் ஈரமான காயங்கள், ஆறுவதற்கு பல காலங்கள் ஆகலாம்.

மலையில் இரு பக்கமுண்டு. ஓன்று ஏற்றம், மற்றொன்று இறக்கம். ஏற்றத்தின் மறுபக்கம்தான் இறக்கம். மலையின் அடுத்த பக்கத்தை அடைய வேண்டுமானால், முதலில் உச்சியை அடைய வேண்டும். பிறகுதான், கீழ்நோக்கிய பயணம். இங்கு மேலிருந்து கீழிறங்குவது வீழ்ச்சியல்ல. அதுதான் வெற்றி!

துன்பத்தின் உச்சியை அப்பா அடைந்து விட்டாரோ என்னவோ! அவரது உதட்டில் லேசாக புன்னகை பூத்திருந்தது. இப்போது அது மிக பலமாக.... மாறியிருந்தது. சிரித்தார்.....

பலமாக....,

மீண்டும்....,

மீண்டும் மீண்டும்....,

அந்த சிரிப்பு சத்தம் சற்று தூரத்திலிருக்கும் மருதங்குடி கண்மாய்க்குள், ஒற்றை வேலிக்கருவையில் அமர்ந்திருந்த நாரையை ஒருமுறை மட்டும் விழிக்கச்செய்துவிட்டு மறுபடியும் தூங்க செய்ததை தவிர வேறெதுவும் செய்யவில்லை.
                                                            
                                               
                                                                                    வே.சுப்ரமணியன்.




 

16 comments:

  1. அருமையான சிறுகதை!
    தொடருங்கள் தொடர்கிறோம் உங்களுடன்.!
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழமையே! தங்களது வருகைக்கும் மேம்பட்ட ஆதரவிற்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  3. அருமையான யதார்த்தமான சிறுகதை
    சொல்லிச் சென்ற விதம் மிக மிக அழகு
    முடிவு என்னை மிகவும் கவர்ந்தது
    அப்படித்தான் இருக்க முடியும்
    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. @Ramani தங்களது மேம்பட்ட வாசிப்பிற்கும், அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அய்யா!

    ReplyDelete
  5. நல்ல சிறுகதை நன்பா...விவசாயிகளின் கஷ்டத்தை பதிவில் உருக்கமாக கூறியுள்ளீர்கள் அருமை...

    ReplyDelete
  6. யதார்த்தமான சிறுகதை
    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. டெர்ரர் கும்மி போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  8. @karthi தங்களது வருகைக்கும் மனம் திறந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. @Abdul Basith மிக்க நன்றி நண்பரே! தங்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. அருமையான சிறுகதை!
    தொடருங்கள் தொடர்கிறோம் உங்களுடன்.!
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. அடடா..மனதை உருக்கும் சிறுகதை.. யதார்த்தமான நடை.. ! எளிமையான பாத்திரப் படைப்பு. ஏழ்மையை எதிர்கொண்டு, தனது உறுதியான மனத்தால் வென்றுவிட்ட அப்பா கேரக்டருக்கு எனது சல்யூட்..!

    பாதி இரவில் பாம்பு புதைத்த இடத்தில் இருக்கும் காசைத் தேடிப் போவது.. எப்படியாவது உரம் வாங்கி, பயிரை காப்பாற்ற வேண்டும் என்ற ஏக்கம்.. உறுதி..இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

    ஒரு ஏழை விவசாயி எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எளிமையாக சொல்லிப் போன விதம் அருமை..

    வாழ்த்துகள் நண்பரே..!

    ReplyDelete
    Replies
    1. தங்களது ஆழ்ந்த வாசிப்பு என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்துகிறது நண்பரே!சக விவசாயியாக நான் பார்த்து உணர்ந்த அனுபவங்களை முடிந்த அளவு பதிவு செய்திருந்தேன் நண்பரே!அவ்வளவுதான். தங்களது வருகைக்கும் ஆழ்ந்த வாசிப்பிற்கும் மனம் நிறைந்த பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  12. பரிசு பெற்றதற்கான காரணம் புரிந்த்தது தோழரே... அருமையான ஆக்கம்... மிக மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழரே! தங்களது வாசிப்பிற்கும் வரவிற்கும் மிக்க நன்றி!

      Delete
  13. கதைகளுடனான படங்கள் மனதில் நின்று விட்டன. வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் உணர்ச்சிமிக்க கருத்துரைக்கும் மிக்க நன்றி நட்பே!

      Delete

அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!