Navigation Menu

சில கவலைகளும், சில சிறைகளும், சில பொருட்களும்.


ஆடம்பர பொருட்கள்,நவநாகரிக பொருட்கள். கடைகளில் பொருட்கள்
 
         நமது வாழ்வின் நோக்கமே மகிழ்ச்சியாக இருப்பதுதான். அதற்காக நாம் செய்ய வேண்டியவை ஏராமானவையாக இருக்கின்றன. நம் மகிழ்ச்சிக்கு தேவை என்னென்னவோ, எதெதெல்லாம் நமக்கு மகிழ்ச்சியை தரும் என நினைக்கிறோமோ, அவை அனைத்தையும் பெற்றுவிட துடிக்கிறோம். இந்த போராட்டத்தில் கன நேர இன்பம் கிடைத்தாலும், துக்கமும் கவலையும் நம்மை ஆட்கொண்டுதான் இருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்த்தால், பெரும்பாலும் அவை நாம் உபயோகிக்கும் பொருட்களாகத்தான் இருக்கும். அதனால்தான் புத்தர் போதித்தார், ‘எந்த பொருளின் மீது உனக்கு ஆசை இல்லையோ, அந்த பொருளினால் உனக்கு துன்பமில்லை’ என்று. ஆமாம், நாம் ஏதாவது ஒரு புதிய
பொருளை பார்த்து, அது நம் வாங்கும் சக்திக்கு அப்பாற்ப்பட்டதாக இருந்தால், அதை வாங்க முடியவில்லையே என்ற கவலை. அதை வாங்கிவிட்டால், அதிக விலை கொடுத்து வாங்கி ஏமாந்து விட்டோமோ? என்ற கவலை, இதை விட உயர்ந்த பொருளை அவன் வைத்திருக்கிறானே என்ற கவலை, இறுதியாக அந்தப்பொருள் நமக்கு பிடித்தமானதாகிவிட்டால், அதை இழக்கும் போது மிகப்பெரிய கவலை. ஆக மொத்தம் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களே நமது கவலைகளுக்கு பெரும்பங்கு காரணமாக அமைந்துவிடுகிறது. நமது சுதந்திரங்களும், மகிழ்ச்சிகளும் நமது பொருட்களுக்குள்ளே சிறைபட்டுப்போய்விடுகின்றன.
 
 
சிறுவயது குழந்தைகள், மகிழ்ச்சியுடன் விளையாடும் குழந்தைகள்

அரசன் ஒருவனின் சிறுவயது மகன், மற்ற குழந்தைகளோடு விளையாட புறப்பட்டுக்கொண்டிருந்தான். அதைக்கண்ட அரசன், “நீ அரசரின் மகன், மற்ற சாதாரண  குழந்தைகளோடு விளையாடக்கூடாது. இருந்தாலும் நீ குழந்தையாகையால், உன்னை அனுமதிக்கிறேன், ஆனால் இந்த மாதிரி உடைகளுடன் அல்ல.” என்று கூறி அக்குழந்தை உடுத்தியிருந்த சாதாரண உடைகளை களைந்துவிட்டு, “இது உனக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உடைகள். இது உலகின் மிக உயர்ந்த ஆபரணங்கள்.” என்று கூறி, விலை உயர்ந்த உடைகளையும், ஆபரணங்களையும் அந்த குழந்தைக்கு உடுத்தி, விளையாட அனுப்பினான். அந்த குழந்தையும் விளையாடசென்றது. ஆனால், மற்ற குழந்தைகளைப்போல் மகிழ்ச்சியாகவும், ஓடியாடியும் விளையாட முடியவில்லை. காரணம், அந்த குழந்தை எங்கே இந்த உடைகள் கசங்கி விடுமோ?, புழுதி பட்டுவிடுமோ? ஆபரணங்கள் அறுந்து விழுந்து விடுமோ? என்று கவலைப்பட்டதே ஒழிய, புளுதிகளின் வாசத்தையும், விளையாட்டின் மகிழ்ச்சியையும் அந்த குழந்தையால் அனுபவிக்க முடியவில்லை. அந்த குழந்தையின் மகிழ்ச்சி, சுதந்திரம், ஆகியவை, உடுத்தியிருந்த ஆடைகளுக்குள்ளும், ஆபரணங்களுக்குள்ளும் சிறைபட்டு போயின.  ஆடம்பர உடைகளும், ஆபரணங்களும் உடுப்புகள் அல்ல. அது நம் மீது போர்த்தப்பட்டிருக்கும் சிறைகள். ஆடம்பர செலவும், ஆடம்பர வாழ்க்கையும் உண்மையில் நரகங்கள்.

சற்றே நாம் சிந்தித்துப்பார்த்தால், நாம் எவ்வளவு கொடுமையான சிறைகளில் அடைபட்டுக்கொண்டிருக்கிறோம் என்பது புரியும். கன நேர இன்பத்தை கொடுத்தாலும், அவற்றை அடையவும், அடைந்தபின் பாதுகாக்கவும் நாம் செய்யும் செயல்கள் அப்பாவித்தனமானது. நமது உண்மையான மகிழ்ச்சியை கண்டடைய இவையாவும் மிகப்பெரிய திரைகளாக இருக்கின்றன. உண்மையில், அன்றாடம் நாம் உபயோகிக்கும் ஆடம்பர பொருட்களை ஒவ்வொன்றாக குறைத்துக்கொண்டு வந்தால், நம் வாழ்வில் மகிழ்ச்சி பெருகுவதை நாம்மால் நன்றாக உணர முடியும்.

அரசன் ஒருவனுக்கு, ஒரு பெரு வணிகன், விலையுயர்ந்த, மிக நேர்த்தியான வடிவில் செய்யப்பட்ட, மிக அழகான கிண்ணம் ஒன்றை பரிசாக கொடுத்திருந்தான். அதை அரசன், சாப்பாட்டு மேசையின் முன் அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்தான். விரல்களால் தொட்டுப்பார்த்தான். மென்மையாக வருடிப்பார்த்தான். அதை மெதுவாக கைகளில் எடுத்து ரசித்தவாறே, அதன் அழகில் லயித்துப்போயிருந்தான். திடீரென்று அது கை தவறி கீழே விழப்போகவே, பாய்ந்து சென்று கைப்பற்றினான் அரசன். விட்டிருந்தால் சிதறிப்போயிருக்கும். இப்போது அரசனுக்கு குப்பென்று வியர்த்துவிட்டது. இதயம் என்றுமில்லாத அளவிற்கு மிக வேகமாக துடித்தது. மிக அதிகமான மூச்சு வாங்கியது. அரசனின் இந்த நிலைமை அவனுக்கே வியப்பை தந்தது. அமர்ந்து யோசித்தான். போர்க்களத்தில் என் கண்களை நோக்கி பாய்ந்து வந்த அம்புகளைப்பர்த்து நான் பயந்ததில்லை. எதிரியின் தாக்குதலைப்பார்த்து என் மனம் சலனப்பட்டதில்லை. என்நாட்டை எவ்வளவோ தூரம் வரை விரிவு படுத்தியிருக்கிறேன். எவ்வளவு பெரிய அரசன் நான். எனது எண்ணங்கள் இதுவரை இப்படி உடைந்து போனதில்லையே! இதற்கெல்லாம் காரணம் இந்த பொருள்தானே, என்று கூறி அந்த கிண்ணத்தை உடைத்தெறிந்துவிட்டு நிம்மதியாக நடைபோட்டான்.


வறுமையில் தவிக்கும் குழந்தைகள், ஏழைகுலந்தைகள்

எங்கோ ஒருவன் அடிப்படை தேவைகளுக்கே அல்லாடிக்கொண்டிருக்கும் நேரத்தில், நாம் மட்டும் நம் தேவைகளுக்கு மீறிய அனாவசிய செலவுகளில் லயித்திருப்பது, மனித உணர்வு கொண்ட ஒருவன் செய்யும் செயலல்ல. நாம் ஒவ்வொரு முறையும் அனாவசிய செலவு செய்யும் போது, ஒரு ஏழையின் வயிற்றை காயப்போட்டுக்கொண்டிருக்கிறோம். “நான் உழைத்தேன், நான் அனுபவிக்கிறேன்” என்ற கேள்விகள் எழலாம். அதேநேரத்தில் நமது உழைப்புகள் எல்லாம் பணம் பறிக்கும் வித்தைகளாகத்தானே இருக்கின்றன.
 
வாகனங்கள் என்பது, பயணம் செய்வதற்குத்தான். வீடு என்பது, பாதுகாப்பிற்குத்தான். அதை விடுத்து சொகுசும், ஒப்பீடும் எப்பொழுது ஆரம்பிக்கிறதோ, அப்போதே மனிதன் சுயநலவாதியாக வெளிப்படுகிறான். துன்பங்களில் உழல ஆரம்பிக்கிறான். அவனது பொருட்களுக்குள்ளே அவன் சிறை படுகிறான். அவனுடையது என்று, எதையெதையெல்லம் வைத்துக்கொள்கிறோனோ, அதற்குள்ளே அவனது வாழ்வும் உலகமும் சுருங்கி விடுகிறது.
ஆமாம் நண்பர்களே! நம்முடையது என்று எதையெல்லாம் நாம் வைத்துக்கொள்கிறோமோ, அதற்குள்ளே நம் வாழ்வும் உலகமும் சுருங்கி விடுகிறது. சுருங்கி இருக்கும் நம் வாழ்வையும் உலகையும் விரிவு படுத்த வேண்டும். பொருட்களில் நாம் சிறைபட வேண்டாம். நமது அடிப்படை தேவைகள் போக, மற்றவற்றிற்காக நாம் செய்யும் செலவுகளை, இயலாதவர்களுக்கு பயன்பட செலவு செய்வோம். ஆடம்பர பொருட்களினால் அடையும் மகிழ்ச்சியை விட, அதை இயலாதவர்களுக்கு பகிர்ந்தளிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி அதிகம். ஆடம்பர வாழ்வில் இல்லை உண்மையான மகிழ்ச்சி, ஒரு ஏழையின் துயர் நீக்கி, அதன் நிம்மதியிலும், அந்த ஏழையின் நன்றி கலந்த பார்வையிலும்தான் இருக்கிறது உண்மையான மகிழ்ச்சி. ஆடம்பரத்தை உடுத்திக்கொண்டு நம் வெளித்தோற்றத்தை மட்டும் காண்பித்துக்கொண்டிருக்க வேண்டாம். ஆடம்பரத்தை அவிழ்த்து எறிந்துவிட்டு, எளிமை எனும் உள் தோற்றத்துடன் வெளிப்படுவோம். அதுதான் அன்பு. அதுதான் அழகு. அதுதான் சுதந்திரம். அதுதான் சொர்க்கம்.
 
                                                                                                                                         வே.சுப்ரமணியன்.

16 comments:

  1. குட்டிக் கதைகளுடன் சிந்தனையைத்தூண்டும் பதிவு.

    ReplyDelete
  2. உங்களது ஒவ்வொரு கருத்தையும் ஆமோதிக்கிறேன். நன்றாக எழுதி இருக்கிறிர்கள்.

    ReplyDelete
  3. @சென்னை பித்தன் தங்களது வருகைக்கும், மேம்பட்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி அய்யா!

    ReplyDelete
  4. @தமிழ் உதயம் தங்களது வருகைக்கும், பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி அய்யா!

    ReplyDelete
  5. உள்ளதை உள்ளபடி உரைத்தவிதம் மென்மையாய், அருமையாய் இருக்கிறது. தேர்ந்த எழுத்தாளாராக பரிணமித்த பதிவு. அருமை....தொடருங்கள் தோழரே!

    ReplyDelete
  6. மாளிகையும் வேண்டாம் , மண் குடிசையும் வேண்டாம்
    மச்சு வீடு போதுமே !
    கதைகளும் கருத்துகளும் அருமை !

    ReplyDelete
  7. ஆடம்பரம் வேண்டாங்கிறிங்க....கதைகள் அருமை....உங்களுக்கு கண்டிப்பாக பேச்சாற்றல் இருக்க வேண்டும் என நினைக்கதோன்றுகிறது இந்த கட்டுரை..

    ReplyDelete
  8. @atchaya மிக்க நன்றி அட்சயா!// தேர்ந்த எழுத்தாளாராக பரிணமித்த பதிவு. // இந்த வார்த்தைகளுக்குரியவனாக என்னை தகுதி படுத்தியதே, தங்களைபோன்ற அன்பு உள்ளங்களால்தான் நண்பரே! மிக்க நன்றி !

    ReplyDelete
  9. @ஸ்ரவாணி மிக அருமையாக சொன்னீர்கள்! தங்கள் வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்பிற்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  10. @veedu தங்களது வாசிப்பிற்கும், புரிதலுக்கும் நன்றி நண்பரே!//உங்களுக்கு கண்டிப்பாக பேச்சாற்றல் இருக்க வேண்டும் என நினைக்கதோன்றுகிறது இந்த கட்டுரை..// சரிதான் நண்பரே!. சில மேடைகள் ஏறியிருக்கிறேன். தங்களது வருகைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. படிக்க படிக்க தாகம்தான்(வாசிப்புதான்) அதிகமானது.நல்ல கருத்தை சமர்பித்ததிற்கு நன்றி சுப்பு !

    ReplyDelete
  12. @மழைதூறல் தங்கள் வருகைக்கும் மேம்பட்ட கருத்து பதிவிற்கும் மகிழ்ச்சி நண்பா! தங்களின் வருகைக்கும், ஆர்வமான வாசிப்பிற்கும் மிக்க நன்றி! தங்களது தொடர் வருகையை எதிர் பார்க்கிறேன். மிக்க நன்றி நண்பா!

    ReplyDelete
  13. ஆடம்பரம் வேண்டாமென்பதை அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்.நண்பரே .

    ReplyDelete
  14. @தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தங்களது வருகைக்கும், மேம்பட்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி தோழமையே!

    ReplyDelete
  15. நல்ல சிந்தனை.நன்றி வாழ்த்துக்கள்.அதீதங்கள் என்று வாழ்வ கெடுத்து விடுபவையாக/

    ReplyDelete
    Replies
    1. தங்களது சிறப்பான வருகைக்கும், கருத்துரைக்கும் மற்றும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete

அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!