Navigation Menu

பொங்கல் திருநாளும், தை முதல் நாள் தமிழர் புத்தாண்டும்!



   ஒரு அரசன் மற்றொரு நாட்டை கைப்பற்றுவது, பெரும்பாலும் அங்குள்ள செல்வங்களை சுருட்டிக்கொள்வதற்கோ அல்லது தனது எல்லையை விரிவுபடுத்துவதற்கு மட்டுமோ அல்ல. தனது நாட்டின் கலாச்சாரத்தை, மொழியை, பண்பாட்டை, மதம் ஆகியவற்றை தான் கைப்பற்றிய நாட்டிலும் புகுத்தி அவற்றை விரிவுபடுத்துவதற்காகவும் ஒரு அரசன், மற்றொரு நாட்டை கைப்பற்றுகிறான். அப்படி முந்தய காலங்களில் தமிழன் வசித்த பகுதிகளும் கைப்பற்றப்பட்டன. பல பண்பாடுகளும் மதங்களும் சாதுர்யமான முறையிலும், மிக வன்மையாகவும் தமிழனுக்குள் புகுத்தப்பட்டது. அப்போது தமிழனின் பெருமை சாற்றும் கலாச்சாரங்களும், பண்பாடுகளும் தூக்கி எறியப்பட்டன. அதற்கு சில எடுத்துக்காட்டுகளாக, தமிழனின் தொன்மை மதங்களான, சைவமும், வைணவமும், ஆரியர்களின் வருகைக்குப்பின்னர், இந்து மதமாக மாற்றப்பட்டதையும், ஆங்கிலேயரின் வருகைக்குப்பின்னர் கிறித்துவமாக அதன் ஒரு பகுதி மாற்றப்பட்டிருப்பதையும் இன்று நாம் கண்கூடாக காணலாம்.

மதம் என்பது மாற்றப்படமுடியாத பெரும் சவாலான ஒன்றாக நாம் காண்கிறோம். ஆனால், அத்தகைய மதத்தையே மாற்றியதோடு மட்டுமல்லாமல், வேற்று மதத்தை தமிழனுக்குள் புகுத்தியத்தை நினைக்கும் போது, தமிழனின் அறியாமையும், வளைந்து கொடுத்தளையும் எவ்வளவு சாதுர்யமாக கொடூர முறையில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. ஆரியர்கள்தான் சாதி என்கிற ஒன்றை தமிழனுக்குள் புகுத்தியது என்கிறது வரலாறு. அப்படியெனில் பார்த்துக்கொள்ளுங்கள், பூங்கூட்டமாக இருந்த தமிழனின் மீது, வன்முறை எவ்வளவு கொடூரமாக ஏவப்பட்டிருக்கிறதென்று.

மேற்கண்ட சில எடுத்துக்காட்டுகள், தமிழனின் மீது ஆக்கிரமிப்பு செய்தவற்றை எடுத்துக்காட்டவேயன்றி, நமது பழைய மதங்களை வலியுறுத்தும் நோக்கத்தில் அல்ல. ஆனால் இனிமேல் நாம் பார்க்கப்போகும் செய்திதான் மிக முக்கியமானது. அதுதான் மதங்களை தாண்டிய தமிழனின் பண்பாடும். அதன் சீற்குலைப்பும்.

நாம் முன்பு பார்த்ததுபோல், ஆரியர்களின் வருகைக்குப்பின்னர், தமிழனின் பல கலாச்சாரங்களும், பண்பாடுகளும் மாற்றப்பட்டன. அவற்றில் மிக முக்கியமாக மூன்றை குறிப்பிடலாம்.

ஓன்று: தமிழனின் வழிபாட்டு முறை:
ஆரியர்களின் வருகைக்கு முன்னர் தமிழர்கள் ஐம்பூதங்களையும், முன்னோர்களின் ஆவிகளையுமே வழிபட்டு வந்தனர். ஆரியர்களின் வருகைக்கு பிறகு, பல கடவுளர்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு புராண கதைகளுடன் தோன்றினர். அப்போதுதான் சாஸ்திரங்களும், சாதிக்கொடுமைகளும் தோன்றின.

இரண்டு: தீபாவளிப்பண்டிகை:
இன்று தமிழர்களான நாம் மிக அதிகமாக செலவு செய்து, மிக முக்கியமாக கொண்டாடும் பெரிய விழா, உண்மையில் தீபாவளிப்பண்டிகைதான். ஆனால், அது உண்மையில் தமிழர்களின் பண்டிகையே இல்லை. ஆரியர்களால் இடையில் நம்மிடையே புகுத்தப்பட்டது.

“ஒருவன் கெட்டவனாக இருந்தாலும், அவன் இறந்ததை கொண்டாடுவது தமிழனின் மரபன்று” என்று தீபாவளிப்பண்டிகையை அய்யா. சுப. வீரபாண்டியன் அவர்கள் குறிப்பிடுகிறார். “பார்ப்பனியத்தின் பாதிப்புகளிலிருந்து விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடுவதில்லை” என்று அய்யா. தொ. பரமசிவன் அவர்கள் தனது “பண்பாட்டு அசைவுகள்” எனும் ஆராய்ச்சி நூலில் குறிப்பிடுகிறார். அப்படியெனில் எது தமிழனின் உண்மையான பண்பாட்டு திருவிழா என்று பார்த்தால், அதுதான் மூன்றாவதாகவும் இக்கட்டுரையின் முழு நோக்கமுமாகும்.

மூன்று: பொங்கல் திருநாளும், தை முதல் நாள் தமிழர் புத்தாண்டும்:

   நாம் முன்பு பார்த்தது போல் இயற்கைக்கும், ஐம்பூதங்களுக்கும், சக உயிரினங்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடும் பொங்கல் திருவிழாவை விட, ஒருவன் இறந்ததை கொண்டாடும், தமிழரின் மரபுக்கு மாறான, தீபாவளிப்பண்டிகையை, ஒரு புராண கதையை சொல்லி ஆரியர்கள் பிரதானப்படுத்திவிட்டார்கள். மேலும், அதோடு மட்டுமல்லாமல், பொங்கல் தினத்தன்று கொண்டாடும் மற்றொரு திருவிழாவான தமிழரின் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டை, மேலும் ஒரு புராண கதையை சொல்லி சித்திரைக்கு மாற்றி விட்டனர்.

      இவ்வாறுதான் தமிழனின் பெருமை சாற்றும் கலாச்சாரங்களும், பண்பாடுகளும் தூக்கி எறியப்பட்டன. ஆனால் தூக்கியெறியப்பட்டவை மண்ணோடு குப்பையாக மக்கிவிடவில்லை. அது விதையாக இப்போது விருட்சமிட்டிருக்கிறது. என்னென்றால் அது தமிழனுடையது. அதுதான் தமிழனனுடைய சிறப்பு. குப்பையாக வீசப்பட்டாலும், விதையாக முளைத்து வருபவன்தான் தமிழன்! அந்த வகையில்தான் “தமிழ் புத்தாண்டு தை முதல் நாளென்று” மீண்டும் முளைத்தெளுந்தான். பல இலக்கிய ஏடுகள் புரட்டப்பட்டன. முன்னோர்களின் வாழ்க்கைகள் பார்க்கப்பட்டன. அதன் விளைவாக பல கருத்துக்கள் ஆதாரப்பூர்வமாகவும், தை முதல் நாள் தமிழ் புத்தாண்டை வலியுறுத்தும் விதமாகவும் முளைத்தெளுந்தன. அவற்றுள் சில..

"தைஇத் திங்கள் தண்கயம் படியும்" – நற்றிணை
"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" – குறுந்தொகை
"தைஇத் திங்கள் தண்கயம் போல்" – புறநாநூறு
"தைஇத் திங்கள் தண்கயம் போல" – ஐங்குறுநூறு
"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" – கலித்தொகை


      
     இந்த இலக்கிய வரிகள், உண்மையான தமிழ் புத்தாண்டை உறுதி படுத்தும் விதமாக மேற்கோள் காட்டப்பட்டது.

"நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!"

'பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்''

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் இந்த வரிகள், “தமிழ் புத்தாண்டு தை முதல் நாள்” என்பதை மேலும் உறுதிப்படுத்துவதற்கு உதவியது. மேலும்,
1921ஆம் ஆண்டு, தனித்தமிழ் அறிஞர் மறைமலையடிகள் தலைமையில், சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் வரலாற்றில் நீங்கா இடம்பெற்ற இந்த கூட்டம் மூன்று முக்கிய முடிவுகளை தமிழ் உலகிற்கு அறிவித்தது. அவை..
1.தைமுதல் நாளே தமிழாண்டுப் பிறப்பு
2.திருவள்ளுவர் பெயரில் தமிழாண்டைப் பின்பற்றுதல்
3.ஆங்கில ஆண்டுடன் (ஏசு கிறித்து பிறப்பாண்டு) 31 ஆண்டுகளைச் கூட்டித் திருவள்ளுவராண்டைக் கணக்கிட வேண்டும்
.

பண்டை கால தமிழர்கள், ஒரு ஆண்டை ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள். அவை..

1.
இளவேனிற்காலம் - ( தை-மாசி)

2.
முதுவேனிற்காலம் - (பங்குனி -சித்திரை)

3.
கார்காலம் - (வைகாசி -ஆனி)

4.
கூதிர்காலம் - (ஆடி -ஆவணி.)

5.
முன்பனிகாலம் – (புரட்டாசி - ஐப்பசி)

6.
பின்பனிகாலம் – (கார்த்திகை - மார்கழி)

     பண்பாட்டுப் சிறப்பு கொண்ட பல சமூகத்தினரும் தங்களுடைய புத்தாண்டை இளவேனிற்காலங்களில்தான் வரவேற்கிறார்கள்தமிழனும் ஒரு காலத்தில் இளவேனிர்காலத்தில்தான் தமிழ் புத்தாண்டை வரவேற்றான். ஆனால் காலப்போக்கில் நாம் மாற்றப்பட்டுவிட்டோம். நமக்கு இளவேனிற்காலம் “தை”யில் தொடங்குவதை வைத்தே நாம் விளங்கிக்கொள்ள முடியும். தமிழ் புத்தாண்டு எப்போது தொடங்குவதென்று. பசுமை நிறைந்த இளவேனிற்காலத்தில் புத்தாண்டு கொண்டாடிய நம்மை, சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் புத்தாண்டு கொண்டாட வைத்துவிட்டது ஒரு கூட்டம். தற்போது நடைமுறையில் உள்ள தமிழ் ஆண்டுகளின் பெயர்களான பிரபவ” முதல் அட்சய” வரை அறுபது ஆண்டுகளின் பெயர்களில் ஓன்றுகூட தமிழில் இல்லை. ஆகவே அது தமிழ் ஆண்டுகள் இல்லை. இதன் மூலம் “சித்திரை ஓன்று தமிழ் புத்தாண்டின் தொடக்கம் என்பது புகுத்தப்பட்டது” என்பதை நாம் எளிதில் விளங்கிக்கொள்ள முடியும். 

     பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகிப்பண்டிகை. இந்த வார்த்தைக்கான பொருளைப்பார்த்தால், கடந்த வருடத்தை மகிழ்வுடன் கழித்துவிட்டு, அதே மகிழ்வுடன் அடுத்த புது வருடத்தை வரவேற்பது என்பதுதான். இந்த போகிப்பண்டிகை எப்போது வருகிறது என்றால், பொங்கல் பண்டிகைக்கும், தை முதல் நாளுக்கும் முந்ததய நாளாகவே வருகிறது. எனவே போகிப்பண்டிகை என்பது, வருடத்தின் இறுதி நாளில் கொண்டாடப்படுவது, என்பது புலனாகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும்”, “தை மழை நெய் மழை” போன்ற வார்த்தைகள் தமிழன் தமிழ் வருடப்பிறப்பை, தங்களின் வாழ்வின் மறுமலர்ச்சி காலமாக அதை ஆவலுடன் எதிர்பார்த்தனர் புலனாக்குகிறது.

      மேற்ண்டவற்றைப்போன்று, இன்னும் பல ஆராய்ச்சிகளின் முடிவாக, தமிழனின் நீண்ட நெடு தவிப்புக்கு ஆகாரமாகவும், சென்ற ஆட்சியில், ஒரு தமிழறிஞர் ஆட்சி பொறுப்பில் அமர்ந்தால் என்ன செய்ய முடியுமோ, அந்த வகையில், தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருந்த, பொங்கல் திருவிழாவை ஒட்டிய, “தை முதல் நாளே, தமிழர்களின் புத்தாண்டு” என்பதனை சட்டமாக இயற்றி, தமிழ் மக்களுக்கு அறிவித்தார் சென்ற ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்திருந்த முதலமைச்சர். இந்த அறிவிப்பால், அனைத்து தமிழ் அறிஞர்கள் மட்டுமின்றி, அனைத்து தமிழ் உள்ளங்களும் அளவற்று மகிழ்வடைந்ததை நாம் அறிவோம்.

      ஆனால், அதை தற்போதைய முதலமைச்சரோ, தனது அரசியல் பகைமையை மனதில் வைத்துக்கொண்டு, முன்னாள் முதலமைச்சரின் திட்டங்களை மாற்றும் பேர்வழியில், அவர் மாற்றும் திட்டங்களின் வரிசையில், “தமிழர்களின் புத்தாண்டு தை முதல் நாளல்ல, சித்திரை ஒன்றுதான் தமிழர்களின் புத்தாண்டு” என்று இவர் சட்டத்தை மாற்றி அமைத்து, அறிவித்துவிட்டார். இந்த அறிவிப்பால் தமிழர்களின் வெறுப்பையே தற்போதைய முதலமைச்சர் பெற்றுக்கொண்டார் என்பது உண்மை. எந்த அளவிற்கு வெறுப்பு என்றால், “தற்போதைய முதலமைச்சர் ஒரு பார்ப்பனர். அதாவது, தமிழர்களின் பண்பாட்டை ஆதியில் சீர்குலைத்த ஆரிய இனத்தை சேர்ந்தவர்” என்று அவரை ஒரு இன வரியாக பிரித்து, வெறுக்கும் அளவிற்கு தமிழர்கள் வெறுப்படைந்துள்ளனர். இவ்வாறான வெறுப்புகள் தனிமனித தாக்குதல்களாக கூட இருக்கலாம். ஆகையால் இது நமக்கு தேவை இல்லை. ஆனால், தமிழனின் பண்பாடுகள் இவ்வாறாக அல்லல் படுவதை பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது.

      ஒவ்வொரு தனிமனிதனுக்கும், அவனுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செயல்கள் சில அவனது நாட்களில் வந்து போகும். அது அவனது கவலைகளை போக்குவது மட்டுமல்லாது, அவனை புதிப்பித்தளுக்கும் உட்படுத்தும். அதுபோல் ஒவ்வொரு இனத்திற்குமாக மகிழ்ச்சி தரக்கூடிய செயல்களாக, அந்த இனத்தின் பண்பாடு மற்றும் கலாசார கொண்டாட்டங்கள் கொண்டாடப்படுகின்றன. ஆனால், இவைகள் மற்றொரு இனத்தால் அழிக்கப்படும்போது, அதுதான் “அடிமை படுத்துதல்” எனப்படுகிறது.
      உண்மையில் நாம் பார்க்கப்போனால், நாம் ஒரு இந்தியனாக சுதந்திரம் பெற்றிருக்கிறோமே ஒழிய, ஒரு தமிழனாக நாம் இன்னும் அடிமைப்பட்டுதான் கிடக்கிறோம்.

      அடிமை தளத்திலிருந்து மீள வேண்டுமாயின், நாம் நமது பண்பாடுகளையும், கலாச்சாரங்களையும் மீட்டெடுக்க வேண்டியது கட்டாயமாகிறது. அதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது, நமது உண்மையான பண்பாடுகளை, நமது தமிழ் உறவுகள் அனைவருக்கும் எடுத்துச்சென்று சேர்ப்பதுதான்.
                                                         

                                                       வே.சுப்ரமணியன்.


11 comments:

  1. சிறந்த கருத்துக்கள் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. பொங்கல் வாழ்த்து நண்பா!பொங்கல் பண்டிகை என்பது தமிழ் சைவ மக்களின் கலாச்சாரம்...விவசாய மக்களின் நாள் தமிழர்களின் புத்தாண்டு இதில் எந்த மாற்றமும் இல்லை சட்டத்தை மாற்றினாலும் தமிழன் மனதில் இன்று புத்தாண்டுதான்!பகுத்தறிவு பேசும் சு.பா மற்றும் கலைஞர்க்கு ஆதிதமிழனின் வழிபாட்டை கேவலமாக பேசும் கூட்டத்தை சேர்நத இவர்களுக்கு தமிழனின் புத்தாண்டை நிர்னயம் செய்ய என்ன தகுதி இருக்கிறது?

    ReplyDelete
  3. தித்திக்கும் அச்சுவெள்ளமாய்
    திகட்டாத செங்கரும்பாய்
    பொங்கி வரும் புதுப் பொங்கலாய்
    மனதிலும் வாழ்விலும்
    மகிழ்ச்சி பொங்கி தங்கி இருக்க

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. திகட்ட திகட்ட தேனருவியாய் பதிவில் உணர்ச்சி பூர்வப் பதிவு. தைத் திங்கள் இனிய நல் வாழ்த்துக்கள்.
    http://atchaya-krishnalaya.blogspot.com

    ReplyDelete
  5. நன்றாக உள்ளது.
    இனிய பொங்கள் நல்வாழ்த்துக்ள்..!

    ReplyDelete
  6. @தமிழானவன் தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அய்யா!

    ReplyDelete
  7. @veedu நன்றி நண்பா! //பகுத்தறிவு பேசும்// பகுத்தறிவுவாதிகள் அப்படி ஒன்றும் உண்மைக்கு புறம்பானவற்றை பேசிவிடுவதில்லை நண்பா! அவர்களால்தான் பல சமூக உண்மைகள் வெளிவந்திருக்கின்றன என்பது எனது கருத்து. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா!

    ReplyDelete
  8. @atchaya வருகைக்கும் மேம்பட்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. @scsudha வருகைக்கும் மேம்பட்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி தோழி!

    ReplyDelete
  10. @யுவராணி தமிழரசன் எனது பயணம் மிகச்சரியான இலக்கை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது என்பதை தாங்கள், எனக்களித்த விருதின் மூலம் உணர்த்தியிருக்கிறீர்கள். அதற்க்கு எனது மனம் நெகிழ்ந்த நன்றிகளை தங்களுக்கு எப்படி வெளிப்படுத்துவது என தெரியாமல் தவிக்கிறேன்! திரு.ரமணி அய்யாவின் மூலம் தாங்கள் விருது பெற்றிருப்பதற்கு, எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! நம்மை இணைத்த பதிவுலகிற்கு நாம் இணைந்தே நன்றி சொல்வோம்! தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்! விருது வழங்கி பெருமைப்படுத்தியதற்கு, கோடான கோடி மனம் நெகிழ்ந்த நன்றிகளை தங்களுக்கு காணிக்கையாக்குகிறேன்! நன்றி!

    ReplyDelete

அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!